தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "நாட்டில் யுத்தம் முடிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த சந்தர்ப்பம் இப்போது வாய்த்துள்ளது.
ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட போதிலும் அரசு அந்த சந்தப்பத்தை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அரசு முனைப்பு காட்டுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடித்து அவர்களுக்குரிய பணியை நிறைவேற்றி விட்டனர். இனி அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு. நாமே அதை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் ராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதியை தூக்கிலிடப் போவதாக பாதுகாப்பு செயலாளர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீண்டகால சமாதானத்திற்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது அவசியம் ஆனால், இன்று வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றனர். அரசியல் தீர்வு பற்றி அக்கறைப்படாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
எனினும் அரசாங்கமோ தமிழ் மக்களின் விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாய்ச்சுவதையே குறியாகக் கொண்டுள்ளனர். நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தால் நாட்டை பிளவுப்படுத்துவதற்காக மீண்டுமொரு போராட்டம் ஆரம்பமாகக் கூடும்.
எனினும் அந்த போராட்டமானது வன்னிக்காட்டில் ஆரம்பிக்காது. நியூயார்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும். போராட்டத்தில் ஆயுதங்களின்றி தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும். போராளிகள் சயனைட் குப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டவர்களாக இல்லாமல் நன்கு கல்வியறிவுடைய புலம்பெயர் வாழ் மக்களாக இருப்பார்கள். அதை இந்த அரசால் தாக்குப்பிடிக்க முடியாது.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பேதங்களற்ற உணர்வு தேவை. அது அரசியல் தீர்வின் மூலமாகவே சாத்தியமாகும்...," என்றார்.
Wednesday, June 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment