Friday, June 11, 2010
{நாம் தமிழர் பேரியக்கம்} நம்பிக் கெடுவதே நம் பழக்கம்
Wednesday, June 9, 2010
போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது ஆனால்..
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "நாட்டில் யுத்தம் முடிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த சந்தர்ப்பம் இப்போது வாய்த்துள்ளது.
ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட போதிலும் அரசு அந்த சந்தப்பத்தை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அரசு முனைப்பு காட்டுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடித்து அவர்களுக்குரிய பணியை நிறைவேற்றி விட்டனர். இனி அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு. நாமே அதை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் ராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதியை தூக்கிலிடப் போவதாக பாதுகாப்பு செயலாளர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீண்டகால சமாதானத்திற்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது அவசியம் ஆனால், இன்று வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றனர். அரசியல் தீர்வு பற்றி அக்கறைப்படாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
எனினும் அரசாங்கமோ தமிழ் மக்களின் விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாய்ச்சுவதையே குறியாகக் கொண்டுள்ளனர். நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தால் நாட்டை பிளவுப்படுத்துவதற்காக மீண்டுமொரு போராட்டம் ஆரம்பமாகக் கூடும்.
எனினும் அந்த போராட்டமானது வன்னிக்காட்டில் ஆரம்பிக்காது. நியூயார்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும். போராட்டத்தில் ஆயுதங்களின்றி தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும். போராளிகள் சயனைட் குப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டவர்களாக இல்லாமல் நன்கு கல்வியறிவுடைய புலம்பெயர் வாழ் மக்களாக இருப்பார்கள். அதை இந்த அரசால் தாக்குப்பிடிக்க முடியாது.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பேதங்களற்ற உணர்வு தேவை. அது அரசியல் தீர்வின் மூலமாகவே சாத்தியமாகும்...," என்றார்.
Tuesday, June 8, 2010
இலங்கை இந்திய அரசுகளின் முதற்தோல்வி எதிர்வரப் போகின்ற பல தோல்விகளின் ஆரம்பமா?
இலங்கையில் ஜுன் 3 முதல் 5 வரை நடைபெற்ற ஒஸ்காருக்கு நிகரான 11வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அதன் தூதுவரும் பிரபலமான நடிகருமான அமிதாப்பச்சன் கலந்து கொள்ளாதது "மணமகன் இல்லாத திருமணத்தைப் போல அதனை ஆக்கி விட்டுள்ளது" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான றோஸி சேனநாயக்கா வர்ணித்திருக்கிறார்.
தாங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளாமைக்கான வேறுவேறு காரணங்களைப் கூறி பொலிவூட்டின் பிரலமான சுப்பர் ஸ்டார்கள் அனைவரும் இந்த விழாவைப் பகிஸ்கரித்து விட்டிருக்கின்றனர்.
இதன்காரணமாக உலகம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற விழாக்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் அதேவேளையில் களையிழந்த ஒரு விழாவாகவும் இது மாறி இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த விழாவை இலங்கையில் நடத்துவது என்ற முடிவில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றிக்கு இந்தியா பிரதான பங்காற்றியிருந்தது. இந்த விழாவை நடாத்துவதனூடாக ஐந்து பிரதான இலக்குகளை அடைய இலங்கை திட்டமிட்டிருந்தது.
முதலாவது சர்வதேச ரீதியாக உள்ள இலங்கை மீதான அபகீர்த்தியை இல்லாதொழித்து நற்பெயரை நிலைநாட்டுவது.
இரண்டாவது, கடந்த 3 வருட காலப் போரினால் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டி எழுப்புவது.
மூன்றாவது, அரசாங்கத்திற்கெதிராக எழுந்து வருகின்ற தெற்கின் எதிர்ப்பலைகளை இவ்வகையான விழாக்கள் மற்றும் களியாட்டங்கள் மூலமாக நீர்த்துப் போகச் செய்வது.
நான்காவது இவ்விழாவில் பெருமளவு தமிழ் சுப்பர்ஸ்டார்களும் தமிழ் நடிக நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் பால் கொண்ட ஈர்ப்பின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கெதிராக எதிர்ப்புணர்வு தணிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு.
ஐந்தாவதும் மிக முக்கியமானதும் இந்திய முதலீட்டாளர்களையும் முதலீடுகளையும் கவர்ந்து இழுப்பது.
இலங்கையின் இத்திட்டப்படி இந்தியாவின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு ஆரம்பத்தில் இலங்கைக்குச் சாதகமானதாகவே இருந்தது. அமிதாப்பச்சன் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியுடன் விருந்துண்டார்.
இந்திய அரசாங்கம் வடஇந்திய நடிகர்களை விழாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டு தென்னிந்தியாவில் கை வைத்த போது தான் வந்தது வில்லங்கம்.
இலங்கை அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஓராண்டு நிறைவுக்குள் இப்படி ஒரு விழாவா, இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுவாசல்களைவிட்டு அகதியாக அலைகையில் இப்படி ஒரு கொண்டாட்டமா? சர்வதேசமே இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில் அந்த இலங்கை அரசாங்கத்துடன் நாம் கூடிக் குலாவுவதா, அந்த விழாவில் நாம் கலந்து கொள்வதா என்று தென்னிந்திய சினிமாத்துறையுள் ஆரம்பித்த முணுமுணுப்பு மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.
தென் இந்திய வர்த்தக சினிமா சங்கம், தென்னிந்திய சினிமாத்துறை ஊழியர் சமாஜம், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியன தமிழ் திரைத்துறையினர் இந்த விihவில் பங்கேற்கக் கூடாது என்று குரலெழுப்பினர்.
தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல கேரளாவிலிருந்தும் எந்த ஒரு நடிகரும் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாயிற்று. மொத்தமாகத் தென்னிந்தியாவே இந்த விழாவைப் பகிஸ்கரித்தது.
ஆனால் அதைவிட இவ்விழாவுக்குப் பேரிடியாக அமைந்தது சர்வதேச இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தூதுவரும் பிரதான நடிகருமான அமிதாப்பச்சன் தான் இவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தது தான். ஆரம்பத்தில் இலங்கை வந்து இவ்விழாவை சிறப்புற நடாத்த உறுதியளித்த அவர் பின்னர் தான் இவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தார்.
இந்திய அரசின் நெருக்குதல் காரணமாக தான் கலந்து கொள்ளாத காரணத்தை நேரடியாகத் தெரிவிக்காத அவர் தனது வலைப்பக்கத்திலும் ருவிற்றரிலும் குஜராத்தின் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கான ஒரு படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமலிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அவருடைய மகனான அபிஸேக் பச்சனும் மருமகளான ஐஸ்வர்யா ராயும் கூட இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
பிரபல திரைப்பட நெறியாளரான மணிரத்னத்தின் புதிய திரைப்படமான இராவணா இந்த விழாவில் திரையிடப்பட இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல. தனது திரைப்படத்தை திரையிடவும் அவர் மறுத்திருக்கிறார். காரணமாக அதன் தயாரிப்பு வேலைகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஹிந்தியின் பிரபல்யமான இன்னொரு நடிகரான ஸாருக்கானோ தனது ருவிற்றரில் தனது வேலைப்பளு காரணமாக கொழும்பு விழாவில் பங்கேற்ற முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே கொழும்பில் 2004ஆம் ஆண்டு ஸாருக்கான் கலந்து கொண்ட ஒரு விழாவில் குண்டு வீசப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஹிந்தியின் முன்னணி நட்சத்தரங்களான கரீனா கபூர், டீபிகா படுகோன், ரன்விர்கபூர், இம்ரான் கான், அமீர் கான், ராணி முகர்ஜி, கஜோல் போன்ற எவரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
தமிழில் கமல்ஹாசன், ரஜனிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களும் மணிரத்னம் போன்ற நெறியாளர்களும் முன்னரேயே விழா அழைப்பை நிராகரித்து விட்டிருந்தார்கள்.
தமிழ் திரைப்பட நடிகையான நமீதா தான் இந்த விழா அழைப்பைத் திருப்பி அனுப்பி விட்டதாகத் தெரிவித்ததோடு, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தமிழ் மக்களுடைய கோரிக்கைக்கு எதிராக தான் ஒரு போதும் செயற்படப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மொத்த்தில் முன்னணி நடிக நடிகையர் அனைவருமே புறக்கணிக்க இரண்டாம் தர நடிகர்களை வைத்தே விழாவை ஒப்பேற்ற வேண்டியதாகி விட்டது.
அதுவும் பல்வேறு காரணங்களால் இந்திய அரசின் நெருக்குதல்களுக்குப் பணிந்து போகக் கூடிய் பலகீனமான நிலையிலிருந்தவர்களையே இந்திய அரசு கழுத்தில் பிடித்துத் தள்ளி விட்டிருக்கிறது.
அப்படி வந்த ஒருவர் ஹிருத்திக் ரோஸன். விளைவாக தென்னகத்தில் திரையிடப்பட்டிருந்த அவருடைய கைற்ஸ் என்ற திரைப்படம் திரையிடப்படாமல் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.
ஆக, மொத்தத்தில் இந்த திரைப்படவிழா ஒழுங்கமைப்பினால் இலங்கை அரசு தானே தனது முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.
இதேவேளை இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்தியத்திரைப்பட விருது வழங்கும் விழாவைப் புறக்கணிப்பதற்கான போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்களில் ஒருவரான தென்னிந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த சீமான் என்.டி.ரிவிக்கு வழங்கிய நேர்காணலில் இப்படிச் சொல்கிறார். "எந்தவொரு சர்வதேச ஊடகமும் போய் முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவும் தயாரில்லை. அங்கிருந்த அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. அவர்கள் வாழ அங்கு வழி இருக்கிறதா? அவர்களை அங்கு கொண்டு போய் வேறு சிறிய சிறிய முகாம்களுக்குள் தான் வைத்திருக்கிறார்கள். எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. அதிபர் தேர்தலும் முடிந்து விட்டது. பாராளுமன்றத் தேர்தலும் முடிந்து விட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டு தமிழர்களுக்கான சுதந்திரத்தை அளிப்பேன் என்று சொன்ன ராஜபக்சவிடம் என்ன சுதந்திரத்தை அழித்தீர்கள் என்று கேட்கவும் யாருமில்லை. தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு எங்கே சமவுரிமை எங்கே என்று கேட்கவும் ஆளில்லை" என்கிறார்.
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஸி சேனநாயக்காவோ மணமகன் இல்லாத திருமண வீடாக இருக்கிறது இந்த விழா என்று வர்ணித்ததோடு விட்டு விடவில்லை.
மேலும் சில விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டில்களில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர். உண்ண உணவில்லை, வாழ்வதற்கு வழியில்லாது, தொழில் இல்லாது பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது, அடிப்படை வசதிகளின்றி பரிதாபமான வாழ்வு வாழ்கின்றனர்.
மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபோதும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வு என்னவென்பதை அரசாங்கம் முன்வைக்கவில்லை. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கல், இனத்துவ கௌரவத்தை வழங்கும் அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்று எச்சரித்துமிருக்கிறார்.
தமிழ் மக்களை மீளக்குடியேற்றி அம் மக்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் அபகீர்த்திக்கு ஆளாகுவதிலிருந்து மீள முடியாது. இதனை சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் அழுத்திக் கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் இந்த விழாவை ஒழுங்கு செய்த நோக்கம் தலைகீழாகி விட்டது.
முதலாவது, இதுவரை நடந்த 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாக்களில் சோபையிழந்த ஒரு விழாவாகவும், பெருமளவு நட்சத்திரங்கள் பகிஸ்கரித்த ஒரு விழாவாகவும், அரசியல் சர்ச்சைக்குள்ளான ஒரு விழாவாகவும் இது நடந்து முடிந்திருக்கிறது.
இரண்டாவது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இவ்வாறான களியாட்டங்களுள் மூழ்கடித்துவிட நினைத்த அரசாங்கத்தினது நோக்கங்களுக்கு மாறாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்ற குரல் தான் இந்த விழாச் சர்ச்சைகளூடு ஓங்கி ஒலித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கமும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசாங்கமும் முதன் முறையாக ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கிறன.
இது எதிர்வரப் போகின்ற பல தோல்விகளின் ஆரம்பமா?
Monday, June 7, 2010
தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு : லீ க்வான் யு

சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும் ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும், குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.
இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.
லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல் வடிவில் வெளியாகியுள்ளது.
அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
ஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம். அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.
இலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.
இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று கூறியுள்ளார்.
தமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்!
அவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.
முன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.
இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.
மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று கூறியுள்ளார் லீ.
இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீ க்வான் யு பற்றி…
1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.
1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.
2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் லீ.
உலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்....
:
விடுதலைப் புலிகள் மீதான தடைகளின் பரிமாணங்களும், அதனை நீக்கவேண்டிய அவசியமும்

...கீழ் (Unlawful Activities Prevention Act ) விடுதலைப் புலிகள் மீதான தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி, விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது தனது கடுமையான சட்டத்தை ஏவியும் வருகின்றது இந்தியா.
விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் இந்தத் தடை காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாக ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் ஒரு புறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நன்மைகள் இந்தத் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதுதான் உண்மை.
முதலாவதாக இலங்கை இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் இருந்தும், வெள்ளை வான் வேட்டைகளில் இருந்தும், முட்கம்பிக் கொலைக் களங்களில் இருந்தும் தப்பி ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு தஞ்சம் தேடி வரும் வழிகளை இந்தியாவின் இந்தத் தடை இரும்புச் சுவர் கொண்டு அடைத்து நிற்கின்றது.
அடுத்ததாக, விடுதலைப்புலிகள் மீது நீடிக்கப்பட்டுள்ள இந்த தடையானது, குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்காவது ஈழத்தமிழர் தமது அரசியல் நகர்வுகளை தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக அறிவித்து நிற்கின்றது.
அத்தோடு, விடுதலைப்புலிகள் மீதான இந்த தடையை அடிப்படையாக வைத்து, ஈழத் தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படும் அல்லது செயற்பட நினைக்கின்ற தமிழ் நாட்டு அரசியல் சக்திகளின் கரங்களையும் முடக்கிப் போடுவதற்கு இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு அளவற்ற அதிகாரங்களையும் கொடுத்து நிற்கின்றது.
இன்று ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து முற்றாகவே விரட்டியடிக்கப்பட்ட நிலையில், எஞ்சி இருப்பவர்கள் அடிமைச் சீவியம் நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களது எதிர்கால அரசியல் நகர்வென்பது தமிழ் நாட்டிலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோதான் மேற்கொள்ளப்படவேண்டி இருக்கின்றது.
இந்தியாவில் புலிகள் மீதான இந்தத் தடை நீடிப்புக் காரணமாக தமிழ் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் ஓரளவு முடக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் நாடுகளிலேயே ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் காத்திரமாக முன்நகர்த்தப்படவேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழர்தான் புலிகள்.. புலிகள்தாம் தமிழர்கள் என்னும் கோஷம் கடந்த ஒரு தசாப்த காலமாக தமிழ் தேசியவாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான ஈழத் தமிழர்களும் நாங்களே விடுதலைப்புலிகள்.. புலிகள் எனப்படுபவர்கள் நாங்கள்தாம் .. என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்து கொள்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களின் கடந்த 30 வருட கால உழைப்புக்கள், கனவுகள், தியாகங்கள் என்பன விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் மீதுதான் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சாதாரணமாகவே எதற்கும் கணக்குப் பார்த்து, பிரதிபலன் எதிர்பார்த்து முதலிடுகின்ற வழக்கத்தை தமதாகக் கொண்ட ஈழத் தமிழ் சமூகம், விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு என்று பெரும் அளவு நிதியையும், தங்கத்தையும், தமது உழைப்பையும், தமது பிள்ளைகளையும், தமது வாழ்வையுமே வழங்கியிருந்தது ஒன்றும் இலகுவில் மறுத்துவிட முடியாதது.
எனவே விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகச் செய்யவேண்டிய விடயங்கள் என்று ஏராளம் இருக்கின்றன. எனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் இருப்பு என்பதும், செயற்பாடுகள் என்பதும் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடித்தரக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு பயங்கரவாத அமைப்பாக உலக நாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டு, விடுதலைப்புலிகள் உலக நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் நகர்வுகள் என்பது எந்த அளவிற்கு ஈழத் தமிழரது போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு நகர்த்த உதவும் என்கின்ற கேள்விக்கு பதில் காணமுடியாமலேயே இருக்கின்றது.
எனவே ஈழத் தமிழர் தமது எதிர்கால அரசியல் இராஜதந்திரப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால், விடுதலைப்புலிகள் மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது பற்றிச் சிந்திப்பது அவசியம்.
அதற்கு முன்னதாக, விடுதலைப்புலிகள் மீது எதற்காக உலக நாடுகள் தடையை விதித்தன என்றும், அந்த தடைகளின் பரிமாணங்கள் என்ன என்றும் சித்திப்பது அவசியம்.
இது பற்றி ஈழத் தமிழர்களும் சிந்திக்கவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பும் சிந்திக்கவேண்டும்.
இன்று விடுதலைப்புலிகள் அமைப்பை உலகில் 32 நாடுகள் தடை செய்து இருக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமாத்தி விடுதலைப்புலிகளை இந்தியா 1992ம் ஆண்டு தடை செய்தது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி இணைத்துக்கொண்டது. (அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பை விஷேட சர்வதேச பயங்கவாதிகள் அமைப்பாக (Specially Designated Global Terrorist) 2.11.2001 இல் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது)
1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளை தடை செய்தது. (இந்தத் தடையை புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 செப்டெம்பர் 4ம் திகதி நீக்கிய போதும், 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மீண்டும் புலிகள் மீதான தடையை நடைமுறையப்படுத்தியது)
2000ம் ஆண்டு பிரித்தானியா விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி தடை செய்தது.
2006ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்தன. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிரிகள் என்கின்ற வாதத்தை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளைத் தடை செய்த கனடா, விடுதலைப்புலிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்கின்ற கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.
2001ம் ஆண்டு ஒஸ்ரேலியா விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி (Resolution 1373) தடைசெய்தது.
இன்று யுத்தம் முடிவடைந்து, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்ததாக அறிவித்து ஒரு ஆண்டு கடந்துவிட்டுள்ள நிலையிலும், விடுதலைப்புலிகளைத் தடை செய்துள்ள 32 நாடுகளில் எந்த ஒரு நாடும் புலிகள் மீதான தடையை இதுவரை நீக்கவில்லை. அப்படி நீக்குவதான சமிக்ஞையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
சர்வதேச மட்டத்தில் பாரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ள தமிழர் தரப்பிற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இது இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், முக்கிய ஜனநாயக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட நிலையில் ஒரு இராஜதந்திர நகர்வை விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழர் தரப்பு செய்யவே முடியாது. எனவே, விடுதலைப்புலிகள் மீதான தடையை எவ்வாறு நீங்குவது என்பது பற்றி சிந்தித்தேயாகவேண்டிய கட்டாயத்தில் ஈழத் தமிழினம் இன்று நின்றுகொண்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை எப்படிப் போக்குவது? விடுதலைப்புலிகள் மீதான தடைகளை எவ்வாறு நீக்குவது?
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிப் பார்ப்பதற்கு, முதலில் விடுதலைப்புலிகள் மீது சுமார் 32 நாடுகள் எதற்காக தடையை விதித்தன என்று பார்ப்பது அவசியம்.
விடுதலைப்புலிகள் மீது மேற்படி இந்த நாடுகள் ஏதற்காகத் தடைகளை விதித்தன என்று பார்க்கின்ற பொழுது, பொதுவாக சில முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே புலிகள் மீதான தடைகளை அந்நாடுகள் விதித்ததுடன், விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.
1. விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.
2. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைக்கின்றார்கள்.
3. சர்வதேச ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள்.
4. ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்றார்கள்.
பொதுவாகவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்துத்தான் விடுதலைப்புலிகள் மீதான தடைகளை உலக நாடுகள் விதித்திருந்தன.
இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, விடுதலைப்புலிகள் மீது இந்த நாடுகள் தடைகளை விதிப்பதற்கும், புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்துவதற்கும் வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
உதாரணத்திற்கு, விடுதலைப்புலிகள் கடற் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு சில நாடுகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஐரிஷ் மோனா (Irish Mona) என்ற கப்பலை 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும், பிறின்சஸ் வேவ் (Princess Wave) என்ற கப்பலை 1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் புலிகள் கடத்தியதாகவும், அதனா (Athena) என்ற கப்பலை சர்வதேச நீர்பரப்பில் வைத்து 1997ம் ஆண்டு மே மாதம் புலிகள், கடத்தியதாகவும், 1997ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எம்.வீ. கோடியலி (MV Cordiality ) என்ற கப்பலையும், 1998ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரின்சஸ் காஷ் (Princess Kash) என்ற கப்பலையும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.வீ.பாரா-3 (MV Farah III ) என்ற கப்பலையும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.
அத்தோடு, 1999ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எம்.வி. சிக் யங் (MV Sik Yang) என்ற காகோ கப்பல் இலங்கையின் வடக்கு–கிழக்கு கடல் பிரதேசத்தில் வைத்து வைத்து காணாமல் போயிருக்கின்றது. அந்தக் கப்பலில் பயணம் செய்ய 31 மாலுமிகளுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அந்தக் கப்பலை விடுதலைப்புலிகளே கடத்தி இருக்கவேண்டும் என்றும், அதனது பெயரை மாற்றி தமது நடவடிக்கைகளுக்கு அந்தக் கப்பலை புலிகள் பயன்படுத்துவதாக சர்வதேச நாடுகள் சில குற்றம் சுமத்துகின்றன.
கனடா, ரொறன்ரோவை அடித்தளமாகக் கொண்டு செயற்படும் மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute), உலகளாவிய ரீதியில் திட்டமிட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் பற்றிய ஆய்வினைச் செய்துவரும் ஒரு சர்வதே அமைப்பு. விடுதலைப்புலிகளைப் புலிகள் அமைப்பான சர்வதேச ரீதியில் ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக இந்த மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute) வெளியிட்ட அறிக்கையானது, சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
விடுதலைப்புலிகள் ஆயுத மற்றும் வெடிபொருட்களைக் கடத்திவருவதாகவும் (international arms trafficking), இந்தக் கடத்தல்களுக்கு புலிகள் சர்வதேசக் கடற்பரப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது. சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு மியன்மாரிலும், தாய்லாந்தின் புகெட் பகுதியிலும் தளங்கள் இருப்பதாகவும், தன்சானியாவில் இருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனது செய்திருந்த 32,400 மோட்டார்களை (81mm) கடத்தியதாகவும் இந்த நிறுவனம் குற்றம் சுமத்தியிருந்தது.
அதேபோன்று விடுதலைப்புலிகள் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பலவந்தமாக நிதிச் சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், கடல் கொள்ளை, ஆட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இரகசியமாகக் கொண்டு செல்லுதல், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல்கள் போன்றன காரணமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் சேகரிப்பதாகவும் பல சர்வதேச அமைப்புக்கள், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
இவற்றிற்கு மேலாக, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் சில இஸ்லாமிய போராட்டக் குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பரவலாக வெளிவந்த செய்திகள்தாம், மேற்குலகம் விடுதலைப்புலிகள் மீது தடை விதிப்பதற்கும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தன.
விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக வெளிவந்த செய்திகளில் பல உண்மைக்குக் புறம்பானவைகளாக, புலிகள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு புனையப்பட்டிருந்தாலும் கூட, அதற்கான சாத்தியங்களை புறக்கணிப்பதற்கு மேற்குலகம் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
70களின் நடுப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பான Popular Front for the Liberation of Palestine என்ற அமைப்பிடம் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்றது மாத்திரம் அல்ல, இந்த அமைப்புடன் இணைந்து தெற்கு லெபனானில் புலிகளும் நேரடியாகப் போராடியதற்கான ஆதாரங்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் உலக நாடுகள் சிலவற்றின் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்கள்.
அதேபோன்று 1998ம் ஆண்டில் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றில், உலகின் முதலாளித்துவதற்கு எதிராக போராடிவரும் சர்வதேச விடுதலைப் போராட்ட சக்திகள், சோசலிச நாடுகள் போன்றனவற்றுடன் கைகோர்த்து நாமும் போராடுவோம் என்று கூறப்பட்டிருந்ததையும், மேற்குலகம் தனது கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தது.
இதேபோன்று ஜனநாயத்தின் ஒரு முக்கிய தளம் என்று கூறி அமெரிக்க-பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற Westminster Journal என்ற செய்தி ஊடகம், விடுதலைப்புலிகள் அமைப்பு 1990ம் ஆண்டில் மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (Moro Islamic Liberation Front -MILF) என்ற அமைப்பிற்கும், அபுசையாப் குழு (Abu Sayyaf Group -ASG) என்று அமைப்பிற்கும் பயிற்சி வழங்கியதை மேற்குலகின் புலனாய்வு அமைப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருந்தது. இந்த இரண்டு அமைப்புக்களுமே சர்வதேச பயங்கவாத அமைப்பாக உலகநாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அல்கைதாவுடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்திய இஸ்லாமிய போராட்ட அமைப்பான அல் உம்மா (Al Ummah) என்ற அமைப்பிற்கும் விடுதலைப்புலிகள் பயிற்சி வழங்கியதாக இந்தியப் புலனாய்வுப்பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.
இதுபோன்ற பரவலான குற்றச்சாட்டுக்கள், திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் காரணமாக விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் பயங்கரவாதிகளாக, தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக அடையாளப்படுத்தும் நிலை உருவானது.
விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான காரணங்கள் என்று ஆராய்கின்ற பொழுது, அதற்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும், புலிகளை சர்வதேசப் பொறிக்குள் வீழ்த்தி தடை செய்வதற்காக எதிரிகள் வகுத்த வியூகங்களும் ஒரு காரணம் என்றால், மறுபக்கம் சில ஈழத் தமிழர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகளும் காரணமாக இருந்தன என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துத்தான் ஆகவேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களாக, விசுவாசிகளாக, பணியாளர்களாக, ஆதரவாளர்களாகச் செயற்பட்ட சில ஈழத் தமிழர்கள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட சில சட்டவிரோத நடவடிக்கைகள் கூட, விடுதலைப்புலிகளின் தடைக்கு சில வழிகளில் காரணமாக அமைந்திருந்தன.
உதாரணத்திற்கு, 1993ம் இல் அமெரிக்கவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ரம்சி யூசுப் (Ramzi Yousef) என்பவருக்கு ஒரு ஈழத் தமிழரே போலிக் கடவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு போலிக் கடவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பின் பகுதி நேரப் பணியாளராக செயற்பட்டிருந்தார். இதனைக் காரணமாக வைத்து ரம்சி யூசுப்பிற்கு விடுதலைப்புலிகள் அமைப்பே போலிக் கடவுச் சீட்டை வழங்கியிருந்ததாக South Asian Terrorism Portal என்ற அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
இதேபோன்று, கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஈழத் தமிழர் கைது செய்யப்பட்ட போழுது, அவர் ஒரு விடுதலைப்புலி செயற்பாட்டாளராக இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு திரிந்த பலர் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட பல சட்டவிரோதச் செயல்கள் கூட, விடுதலைப்புலிகள் சர்வதே ரீதியில் தடைசெய்யப்படக் காரணமாக அமைந்திருந்தன.
அத்தோடு, சாதாரணமாக மேற்குலகிற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்த பெரும்பாலான மக்கள் தாங்கள் அகதி அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்களிடம் விடுதலைப்புலிகளை மோசமாகச் சித்தரித்துக் கொடுத்த வாக்கு மூலங்கள் கூட, விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் போராட்ட அமைப்பு அல்ல என்கின்ற தீர்மானத்தை மேற்குலகம் எடுக்கக் காரணமாக அமைந்திருந்ததாக அண்மையில் என்னுடன் பேசிய மேற்குலகு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
சரி, இப்பொழுது கேள்வி இதுதான்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது எப்படி?
தற்பொழுது யுத்தம் முடிவடைந்து விட்டது. எனவே புலிகள் மீது பிரதானமாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களான: விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள், விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைக்கின்றார்கள், சர்வதேச ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள், ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்றார்கள் போன்ற எந்த ஒரு விடயமும் விடுதலைப்புலிகள் தரப்பால் தற்பொழுது செய்யப்படுவதில்லை.
கடந்த ஒரு வருடமாக மேற்குறிப்பிட்ட எந்த ஒரு நடவடிக்கையுமே நடைபெற்றிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை முற்றாகவே மௌனித்து, ஜனநாயக வழிகளிலேயே தமது விடுதலையை வென்றெடுக்க விளைகின்றார்கள். எனவே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான முகாந்திரங்கள் பல நாடுகளில் தானாகவே இல்லாமல் போய்விடுகின்றன.
இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் தரப்பும், உலகத் தமிழ் அமைப்புக்களும் புலிகள் அமைப்பின் மீதான தடையை சர்வதேச மட்டத்தில் நீக்குவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
முதலாவதாக விடுதலைப்புலிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தரப்பினர் தாம் உலக நியதிகளின்படிதான் தமது மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர ஆவலாக இருக்கின்றோம் என்கின்ற விடயத்தை உலக நாடுகளுக்கு கூற முயலவேண்டும். அடிக்கப் போகின்றார்கள்.. பிடிக்கப் போகின்றார்கள் அதோ அங்கே பத்தாயிரம் பேர் இருக்கின்றார்கள்.. இதோ இங்கே இவர் இருக்கின்றார் போன்ற அறிக்கை பம்மாத்துக்களைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக, விடுதலைப்புலிகள் மீது கிரிமினல் குற்றங்கள் எதுவும் வராத அளவிற்கு அந்த அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் செயற்படவேண்டும். அடாவடித்தனங்கள், சமூகவிரோதச் செயல்கள் போன்றனவற்றில் ஈடுபடும் உறுப்பினர்களை அமைப்பில் இருந்து பகிரங்கமாக விலக்கி வைக்கவேண்டும். ஜனநாயக நடைமுறையில் தமக்கு இருக்கும் ஈடுபாட்டை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தவேண்டும்.
மேற்கூறியனவற்றைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஊடாக அந்தந்த அரசாங்கங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.
இதுபோன்ற பல்வேறு வியூகங்களை வகுத்து நகர்வெடுக்கின்றபொழுது விடுதலைப்புலிகள் மீது பல நாடுகள் விதித்திருக்கும் தடைகள் தானாகவே நீக்கப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது